எம்மைப்பற்றி

அறிமுகம்

சுவிற்சர்லாந்து நாட்டில் தாய்மொழிக்கல்வியுடன் கலை வகுப்புக்களையும் முன்னெடுத்துவந்த தமிழ்க்கல்விச்சேவை 1997ம் ஆண்டு முதல் நுண்கலைத் தேர்வுகளையும் நடாத்தியது. இத்தேர்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இத்தேர்வினைத் தொடர்ந்து மேலும் சிறப்பாகவும், ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலும் நடத்த வேண்டிய தேவை உணரப்பட்டது.

இதனடிப்படையில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் இயங்கிவந்த அதிகளவு கலை ஆசிரியர்களின் ஆதரவுடன் பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பெற்றது. சுவிற்சர்லாந்து நாட்டு சட்டவரைமுறைகளுக்கமைய பதிவு செய்யப் பெற்று இந்நிறுவகம் இயங்கிவருகிறது.

இவ் அமைப்பானது ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழ் மாணவர்களுக்கென இலகுவானமுறையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்து வெளியிட்டது. இப்பாடத்திட்டமானது கலை ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு தாயகம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கலைத்துறை வித்தகர்களின் கருத்துக்களுடன் முழுமைப்படுத்தப்பட்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், பொதுவான தேர்வு விதிமுறைகளுக்கு அமைவாக 2002ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் கலைத் தேர்வுகளுக்கு யேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி, நோர்வே, சுவிற்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றியுள்ளார்கள். பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இம் மாணவர்களைத் தேர்விற்குத் தயார்ப்படுத்தி அனுப்பி வைப்பதுடன் மாணவர்களதும், தங்களதும் கலைப்பயணத்தினை சீரான நோக்கோடு முன்னெடுத்து வருகின்றார்கள்.

நிறுவகத்தின் தோற்றத்தாலும், செயற்பாட்டாலும் பல ஆசிரியர்கள் தமது கலைவாழ்வை மேலும் வளர்த்துள்ளதுடன், மாணவர்களையும் சிறப்புற பயிற்றுவித்துள்ளனர். தரம் ஒன்றிலிருந்து தரம் ஏழு (ஆற்றுகைத்தரம்) வரை தேர்வுகள் ஒவ்வோராண்டும் நடாத்தப்படுகின்றன. 2002ம் ஆண்டுமுதல் 2017ஆம் ஆண்டுவரையான தேர்வாண்டுகளில் …….. மாணவர்கள் ஆற்றுகைத்தரத் தேற்விற்குத் தோற்றியுள்ளார்கள். அனைத்துத் தேர்வுகளிலும் சித்தியடையும் மாணவர்கள் “கலைவித்தகர்” என்னும் பட்டத்தினைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாகின்றனர்.

புலமைக்குழு, துறைசார்குழு, நிறைவேற்றுக்குழு, நிர்வாகக்குழு போன்ற கட்டமைப்புக்களினைக் கொண்டு இயங்கிவரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது செயற்பாடுகளை சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் தொடர்புப் பணியகத்தினைக்கொண்டு முன்னெடுத்துவருகிறது .